
இலங்கை ஒலிம்பிக் சம்மேளனத்தினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட ஒலிம்பிக் விழுமியம்சார் கல்வியியல் விவாதக்களப் போட்டியில் யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது.
இப்போட்டியில் அனேகமான பாடசாலைகள் மேல் மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்திலிருந்து பங்குபற்றின. அவை தவிர குறிப்பாக யாழ் பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி என்பன வட மாகணத்திலிருந்தும்; அநுராதபுரம் மத்திய கல்லூரி வட மத்திய மாகாணத்திலிருந்தும்; வின்சன்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை கிழக்கு மாகாணத்திலிருந்தும் பங்குபற்றின.

இப்போட்டியானது கடந்த வருடம் ஒக்டோபர் காலப்பகுதியில் ஒன்லைன் மூலம் ஆங்கில மொழியில் நடாத்தப்பட்டதாகும். மிகவும் சிறப்பாக செயற்பட்ட சுண்டிக்குளி மகளிர் அணியினர் முதல் சுற்றில் 85 புள்ளிகளுடன் 5ஆம் இடத்தைப்பெற்றதுடன்; இரண்டாம் சுற்றில் 83 புள்ளிகளைப் பெற்று 6ஆம் இடத்தைப் பெற்றது.
எனினும் இரண்டு சுற்றுக்களின் மொத்தப்புள்ளிகள் அடிப்படையில் சுண்டிக்குளி 168 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது. இது அவர்களுடைய ஒட்டுமொத்த பெறுபேறை எடுத்தியம்புகின்றது.

அரையிறுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்கா வித்தியாலத்துடன் 82க்கு 87 எனும் புள்ளிகளைப்பெற்றதால் இறுதிப்போட்டிக்கு நுளையும் வாய்ப்பை இழந்தது. இருப்பினம் மிகுந்த உற்சாகத்தில் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் களமாடிய சுண்டிக்குளி கண்டி குட் செபேட் கொன்வென்ற் பாடசலையுடன் மிகவும் வலுவான சொல்லாடலில் 85க்கு 84 எனும் புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது.
இதற்கு முதல் இவ்வாறான விவாத போட்டியானது கொழும்புக்கும் கண்டிக்கும் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எந்தவித முன் அனுபவமும் இன்றி ஒலிம்பிக் விழுமியம் எனும் வித்தியாசமான தொனிப்பொருளில் முதல் முதலாக களமிறங்கிய மிகுந்த ஊக்கத்துடனும் வைராக்கியத்துடனும் களமிறங்கிய யாழ் பரியோவான் மற்றும் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி அணியனரை வாழ்த்துவதுடன் சிறப்பாக வாதாடி இந்த தேசிய மட்ட விவாத போட்டியில் 3ஆம் இடம் பிடித்த மாணவிகளுக்கு சிறப்பு பாராட்டுக்கள்.
சுண்டிக்குளி அணி சார்பாக ஜோஆன் சோபியா போல்சுரேஷ், ஆரபி அறிவழகன், அபினயா கோபிஷங்கர் மற்றும் வேழினி குமாரவேல் ஆகியோர் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். சுண்டிக்குளி அணிசார்பாக அவ் அணியின் மாணவி கோபிஷங்கர் அபிநயா அவர்கள் 23 மார்ச் அன்று தேசிய இலங்கை ஒலிம்பிக் சம்மேளனத்தில் நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்தில் கலந்து பரிசில்களை பெற்றுக்கொண்டார். அவர்களுக்கு வழிகாட்டியாகவம் பயிற்றுவிப்பாளராகவும் ஆசிரியர் அனுலோஜா தேவதாசன் அவர்கள் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவர்களுக்கு ஊக்கம் அளித்த பாடசாலை அதிபர் திருமதி துஸ்யந்தி துசிதரன் அவர்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

இந்த பெறுபேறானது எடுத்து காட்டுவது யாதெனில், யாழ் மாவட்ட மாணவர்களுக்கு திறமைகள் பல ஒழிந்திருக்கின்றன. சந்தர்ப்பங்களை தவறவிடாது அவற்றை சவாலாக எடுக்கும் பட்சத்தில் அவர்களால் சிறப்பாக செயல்பட்டு சிறந்த பெறுபேறுகளை அகில இலங்கை ரீதியிலும் சர்வதேசத்திலும் சாதிக்கமுடியும் என்பதை எடுத்து காட்டுகின்றது.
