யுத்தத்தின் இறுதி மாத காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான இராணுவத்தின் குண்டுத்தாக்குதலின் போது அத்தாக்குதல் பொது மக்களையும் கொடூரமாகத்தாக்கியது. அலப்போ மற்றும் மொசூலில் நடந்தது போல பலர் கிளர்ச்சிக் குழுக்களின் பிரதேசங்களுக்குள்ளும் இருந்தனர். இன்று ஒரு சமாதானச் சூழல் காணப்படுகிறது; ஆனால் இலங்கையின் 26 வருடகால யுத்தத்தின் வலிமாறக் காயங்கள் இன்னமும் சமாதானம் எனும் போர்வையால் மூடி மறைக்கப்பட்டு நசுக்கப்பட்டுதான் இருக்கிறது.

கலைஞன் சிவா கஜா அவர்கள் நத்தையானது அதனுடைய முதுகின் மேல் எவ்வாறாக தன்னுடைய நத்தைமேலோட்டினைக் காவிச் செல்கின்றதோ அவ்வாறாக யுத்தத்தின் ஆறாத்துயருடன் அவற்றைச் சித்திரமாக வடிவமைத்துவருகிறார். இலங்கையினுடைய வடக்கின் சுத்தந்திரத்துக்காகப் போராடிய குழுவான தமிழ்ப் புலிகளுக்கும் (தமிழீழ விடுதலைப் புலிகள், த.வி.பு) இலங்கை அரசுக்கும் இடையில் 1983 ஆம் ஆண்டிலிருந்து யுத்தம் முடிவுக்கு வரும் வரையும் பொதுமக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுக்கொண்டிருந்தனர். “இது நத்தையை போலவே, தங்களுடைய முதுகுகளிலே தங்களுடைய பாரச்சுமைகளை சுமந்துகொண்டு சென்ற எம்மினத்தை நான் யுத்தத்தின் இறுதி காலகட்ட மாதங்களில் நன்றாகவே பார்த்தும் அனுபவித்தும் இருக்கிறேன்” இவ்வாறாக சிவா கஜா அவர்கள் கூறிக்கொண்டார்.
வடக்கு இலங்கையினுடைய தலைநகரமாக இருக்கின்ற யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒரு புறநகர் பகுதியில் வாடகைக்கு அமர்ந்திருக்கின்ற சிவா கஜா அந்த வீட்டினுடைய உள் முற்றத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டிருக்கிறார். மென்மையான பஞ்சு முகில் சட்டென மழையாகப் பொழிகிறது, அந்த வெளி முற்றம் முழுவதும் நீரில் மூழ்குகிறது. நாங்கள் சற்றே கதிரைகளை தாழ்வாரத்துக்குள் நகர்த்திக்கொண்டு தொடர்ந்து பேசிகிக்கொண்டேயிருக்கிறோம்.
எட்டு வருடங்களின் முன்னர், எல்லாவற்றையும் இழந்து எடுக்க முடிந்ததை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த நத்தைகளில் ஒருவனாக — சிவா கஜா. அது முல்லைத்தீவு பிரதேசமாக இருந்தது — அனைத்தும் முடிந்து விட்ட இலங்கையின் வட-கிழக்கிலிருந்து தமிழர்களின் நகரங்களும் கிராமங்களும் இருக்கின்ற ஒரு நெடுங்கடற்கரைப் பிரதேசமாகும். அங்கே தான் சிவா கஜா வசித்துவந்தான். அத்துடன் அரசாங்கத்தின் குண்டுகளால் பலவந்தமாகத் தப்பி ஓடும்படி பணிக்கப்பட்டு கலைக்கப்பட்ட தமிழ் புலிகளின் பிரதேசமாகவும் பல சிவிலியன்கள் வாழ்ந்த பகுதியாகவும் அது இருந்தது. இறுதில், எல்லோரும் ஒன்றாக சேர்ந்ததும் முல்லைத்தீவின் ஒரு சிறிய கடற்கரைத் துண்டுக்குள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

சிவா கஜா யுத்தத்தில் அவன் அவனுடைய மூத்த சகோதரியை இழந்தான்; நான்கு மாதங்கள் கழித்து அவனுடைய அம்மா மற்றும் இளைய சகோதரி இருவரையும் 2004 ஆம் ஆண்டு எதிர்பாராது உலுக்கிய ஆழி பேரனர்த்தமாம் சுனாமி காவுகொண்டுகொண்டது. இன்று அவனது அப்பாவும் இரு சகோதரர்களுமே எஞ்சியிருக்கிறார்கள். இந்த கொடிய யுத்தத்தின் பின்னராக அவன் அவனுடைய சகோதரிகளையும், அம்மாவையும், தன்னுடைய சுய உருவப்படத்தையும், துப்பாக்கிகளாலும் குண்டுகளாலும் பொறிவைக்கப்பட்டுள்ள உலகத்தையும் சித்தரிக்க ஆரம்பித்தான்.
‘எனக்கு என்னுடைய சகோதரி எப்படி இருக்கிறாள் என்று தெரியவில்லை எனவே, நான் அவளின் வெறுமையான உருவப்படத்தை மட்டுமே வரைகிறேன். எல்லாமே யுத்தத்தினால் காணாமல் போய்விட்டது; எனவே, என்னிடம் அவளின் புகைப்படம் ஒன்றுமே இல்லை; அத்துடன் நான் இனி அவளைப் பார்க்கப்போவதும் இல்லை. சில வேளைகளில் நான் சிந்திப்பது என்னவெனில் அவள் இன்னமும் உயிருடன் இருப்பதாகவும் அவள் ஒரு இலங்கை இராணுவவீரனை மணம் செய்து இருக்கிறாள் என்றும் — இலங்கை இராணுவம் இறுதி யுத்தத்தின் போது பல பெண்களை எடுத்துச் சென்றது. அது தான் நான் அவளை ஒரு இராணுவ அங்கியில் சித்தரிக்கிறேன்.’ — சிவா கஜா

‘நான் நந்திக்கடலை கூட வரைகின்றேன், அந்த நீர்ப்பரப்பிலே இறுதியாக பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. நான் எல்லா மிருகங்களையும் மீன்களையும் வரைகின்றேன். அவைகள் கூட யுத்தத்தினால் மிகவும் அவதியுற்றன. அனால் அவற்றின் வலியைச் சொல்வதற்கு எந்த மொழியும் இருக்கவில்லை. நீங்கள் என்னிடம் யுத்தகாலப்பகுதிகளில் என்ன செய்தீர்கள்? எங்கே போனீர்கள்? என்றெல்லாம் கேட்டால் என்னால் அவற்றையெல்லாம் தெளிவாக கூறமுடியாது. ஏனெனில் எங்களுக்கே தெரியாது நங்கள் எங்கே போய்க்கொண்டிருந்தோம் என்று, எல்லாரும் ‘அங்க போ’, ‘இங்க வா’ என்று கத்தி கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். பலர் இலங்கை இராணுவமும் தமிழ்ப்புலிகளும் என்னை என்ன நடந்தது என்று கூட பலவந்தப்படுத்திக் கேட்டனர். இறுதிக் கட்டத்தில் நான் புலிகளில் ஒருவன் போல உடையணிந்திருந்தேன். அவர்கள் என்னை ஆட்சேர்ப்பதில் முயற்சித்தனர். எனவே, நான் அவர்களில் ஒருவன் போல பாசாங்குபண்ணிக்கூடவிருந்தேன்.’ — சிவா கஜா
சிவா கஜா மூன்று இலட்சத்துக்கு மேலான மக்கள் இடம்பெயர்ந்த போது இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்ற சில ஞாபகங்களை மீண்டும் மீண்டும் சித்தரித்துக்கொண்டிருக்கிறான். அவன் எப்பொழுதுமே யுத்தத்தின் இறுதியில் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருந்த ஞாபகங்களையும் அந்த சிறிய மணற்படுக்கை இடத்தையும் அடிக்கடி சித்தரிக்கிறான்.
‘சித்திரம் எனக்கு என் வாழ்வில் முக்கிய ஒன்றாக மாறிவிட்டது. சித்திரம் வரையாதவர்கள் எவ்வாறு அவர்கள் தங்களுடைய ஞாபகங்களை மீட்கிறார்கள் என்பது எனக்கு புரிவதில்லை. இன்னமும் என்னால் சிலவற்றை வார்த்தைகளால் புரியவைக்க முடியாது.’ — சிவா கஜா
நேர்முகம் மற்றும் கட்டுரை சுவீடன் மொழியில்: ஜென்னி குஷ்டபிஸோன், தமிழில் மொழிபெயர்ப்பு: கோபிநாத்
